கடலூர், பழமைவாய்ந்த கடலூரை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்துள்ளனர். இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள், கடலூரில் உள்ள புனித டேவிட் கோட்டையை தங்கள் மாகாணத்தின் தலைநகராக மாற்றி ஆண்டு வந்தனர். இது தவிர சோழர், பல்லவர், முகாலயர்களும் ஆட்சி செய்துள்ளனர். இது போன்ற பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்கதாக கடலூர் இருந்து வருகிறது.
கடலூர் நகராட்சி 1866-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த நகராட்சியில் கடந்த 1959-ம் ஆண்டு 32 வார்டுகள் இருந்தது. அதன்பிறகு மக்கள் தொகை பெருக்கத்தால் 45 வார்டுகளாக மாற்றப்பட்டது. இந்த நகராட்சி 9.3.1993 -ல் தேர்வு நிலை நகராட்சியாகவும், 2.12.2008 முதல் சிறப்பு நிலை நகராட்சியாகவும், பின்னர் பெருநகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. 21.10.2021 அன்று கடலூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
27.69 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மாநகராட்சி பகுதி அமைந்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1 லட்சத்து 73 ஆயிரத்து 636 பேர் வசித்து வந்தனர். 2021-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 1 லட்சத்து 98 ஆயிரத்து 987 பேர் வசித்து வருகின்றனர். 49 ஆயிரத்து 515 வீடுகள் உள்ளன. 738 தெருக்கள் உள்ளன. இங்கு 7 சமுதாய கூடங்கள், ஒரு பஸ் நிலையம், 3 மார்க்கெட், 291 கிலோ மீட்டர் சாலைகள் உள்ளது.
இந்த மாநகராட்சியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருந்து வருகிறது. இந்த பிரச்சினைகளை புதிதாக பதவி ஏற்ற மாநகராட்சி மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து தீர்க்க முயற்சி செய்வார்கள் என்று சமூக ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகளிலும் குப்பைகளை கொட்டுவதில் பெரும் பிரச்சினை நிலவி வருகிறது. ஏற்கனவே இருந்த 2 குப்பை கிடங்குகளும் மூடப்பட்டதால், தற்போது குப்பைகளை கெடிலம் ஆற்றில் கொட்டி வருகின்றனர். இது தவிர வீதி எங்கும் குப்பைகள் கொட்டப்பட்டு, தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதன் மூலம் எங்கும் புகை மண்டலமாக காட்சி அளித்து வருகிறது.
அதேபோல் பாதாள சாக்கடை திட்டமும் முழுமையாக நிறைவேற்றவில்லை. விடுபட்ட வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் தெருக்களில் சாக்கடை நீர் ஓடுவது தடுக்கப்படும். கடலூர் மாநகரில் போக்குவரத்து நெரிசல் பெரும் சவாலாக உள்ளது. இதற்கும் நிரந்தர தீர்வு காண வேண்டும். வார்டுகள் தோறும் கழிவறை வசதியின்றி, திறந்த வெளியை பயன்படுத்தும் நிலை உள்ளது. இதற்கும் தீர்வு காண வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் உள்ளன.
வீடுகளில் குப்பைகளை வாங்கும் போதே, அவற்றை தரம் பிரித்து வாங்க வேண்டும். இல்லையென்றால் வார்டு வாரியாக அதற்கென தனி இடம் அமைத்து, அங்கு மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும். பிளாஸ்டிக், பாட்டில், அட்டை போன்றவற்றை மாநகராட்சி வாங்கி, அதன் மூலம் மக்களுக்கு கிடைக்கும் வருமானத்தை மாநகராட்சி வரியாக வசூல் செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவ கழிவுகள், இறைச்சிக்கழிவுகளை முறைப்படுத்த வேண்டும். குப்பைகளை ஒரே இடத்தில் கொட்டக் கூடாது. மாநகராட்சியில் பெரும்பாலான கடைகளுக்கு வாகன நிறுத்துமிடம் இல்லை. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க பொது இடத்தை உருவாக்கி, அதில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
ரெயில்வே நிலையத்தில் மாநகராட்சி சார்பில் வாகன நிறுத்துமிடம் அமைத்து கட்டணம் வசூல் செய்ய வேண்டும். பஸ் நிலையத்தை மேம்படுத்த வேண்டும். புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும். மாவட்ட தலைநகரில் மாநகராட்சி உள்ளது. ஆனால் போதிய கழிவறைகள் இல்லை. ஆகவே குறிப்பிட்ட இடங்களில் கழிவறை வசதி அமைத்து தர வேண்டும்.
ஆஸ்பத்திரிகள், பள்ளிகளை மேம்படுத்த வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு எற்பட்டால், அதை சமாளிக்க மாற்று திட்டம் இருக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுகிறதா ?என்பதை கண்காணிக்க வேண்டும்.
கார், வேன், ஆட்டோ நிறுத்தத்தை முறைப்படுத்த வேண்டும். தெருவோர கடைகளை ஒழுங்குப்படுத்த வேண்டும்.நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆண்டுதோறும் மழை வெள்ளத்தால் கடலூர் பாதிக்கப்படுகிறது. இதற்கு நிரந்தர வடிகால் வசதி தேவை. ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் வசதி அமைக்க வேண்டும். கெடிலம், தென்பெண்ணையாறு கரைகளை உயர்த்தி பலப்படுத்த வேண்டும். பெண்ணையாற்று கரையில் ஆல்பேட்டை முதல் கடற்கரை வரை சாலை வசதி அமைக்க வேண்டும். போக்குவரத்து சீரமைக்க முக்கிய இடங்களில் ரவுண்டானாவுடன் கூடிய சிக்னல் அமைக்க வேண்டும்.
ஊராட்சி பகுதிகளில் கூட வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. ஆனால் மாநகராட்சியில் பல இடங்களில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. இதை முறையாக வழங்க வேண்டும். நிலத்தடி நீர் மாசுப்பட்டு வருகிறது. குறிப்பாக கம்மியம்பேட்டை தடுப்பணையில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதான பிரச்சினையாக சுடுகாடு வசதி இல்லை. மின்மயான வசதியையும் கூடுதலாக அமைக்க வேண்டும். சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகிறது. இதை தடுக்க வேண்டும். கடலூர் சில்வர் பீச், புனித டேவிட் கோட்டை, அருங்காட்சியகம், கலெக்டர் முகாம் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை மேம்படுத்தி சுற்றுலாவாக சென்று பார்வையிட ஏற்பாடு செய்ய வேண்டும். கடலூர் திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் துறைமுகத்தை மேம்படுத்தி, கப்பல் போக்குவரத்து தொடங்க முயற்சி எடுக்க வேண்டும்.
இது போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு புதிய மாநகராட்சி நிர்வாகம் தீர்வு கண்டு, சிறந்த மாநகராட்சியாக மேம்படுத்த வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.