சீர்காழி: வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சீர்காழி ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை தாங்கினார். ஆணையர்கள் இளங்கோவன், அருள்மொழி, துணைத் தலைவர் உஷா நந்தினி பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் மன்ற பொருள்களை வாசித்தார்.
ரீமா (அ.தி.மு.க.):- நிம்மேலி ஊராட்சியில் நீண்டகாலமாக சேதமடைந்த நிலையில் உள்ள ரேஷன்கடை கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
ஜான்சிராணி (சுயேச்சை):- எனது பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 108 ஆம்புலன்ஸ் தொடக்க விழா மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு உள்ளிட்ட அரசு விழாக்களுக்கு அந்த பகுதியை சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்காதது வேதனையாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.
கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
நடராஜன் (அ.தி.மு.க):- அரசு விழாக்களுக்கு கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும். ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு வளர்ச்சி பணி மேற்கொள்ள ரூ.5 லட்சம் மட்டுமே ஒதுக்கப்படுவதால் அனைத்து பகுதிகளுக்கும் தங்களால் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. எனவே கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
விசாகர் (தி.மு.க):- சட்டநாதபுரம் ரவுண்டானா அருகில் உள்ள பயணிகள் நிழலக கட்டிடத்தில் இருக்கை இல்லாததால் பயணிகள் தரையில் அமர வேண்டிய நிலை உள்ளது. எனவே இருக்கைகள் அமைத்து தர முன்வர வேண்டும். சட்டநாதபுரம் ஊராட்சியில் ஒரே பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் மற்றும் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் சட்டநாதபுரம் ஊராட்சியில் எத்தனை வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தெரிவிக்க வேண்டும்.
அறிவழகன் (சுயேச்சை), 2020-2022 வரை எந்தெந்த திட்டத்திற்கு எவ்வளவு பணம் வந்துள்ளது. என்ற விவரங்களையும், எந்தந்த பணிகள் நிறைவு பெற்றுள்ளன என்பதையும் உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ராதாநல்லூர் ஊராட்சி பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சோனியாகாந்தி இளமுருகன் (தி.மு.க):- காடாகுடி- ஆதமங்கலம் இடையே உள்ள இணைப்பு சாலையை சீரமைக்கும் பணியினை துரிதப்படுத்த வேண்டும். பெருமங்கலம், புங்கனூர் ஆகிய ஊராட்சிகளில் புதிய ரேஷன் கடை கட்டிடம் அமைத்து தர வேண்டும்.
தென்னரசு (தி.மு.க):- எனது ஊராட்சியில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும். ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு வளர்ச்சி பணி மேற்கொள்ள கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
விஜயகுமார் (அ.தி.மு.க):- செம்மங்குடி ஊராட்சி கொளத்தூர் கிராமத்தில் புதிதாக தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
நிலவழகி கோபி (தி.மு.க.):- கோணயாம்பட்டினம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கதவுகள் அமைத்து தர வேண்டும்.
ஒன்றியக்குழு உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிதி நிலைக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய அரசுக்கு தெரியப்படுத்தப்படும்.
கூட்டத்தில் பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை, மேலாளர்கள் சுமதி, சசிகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனைத்து துறையை சேர்ந்த அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.