திருவள்ளூர் அடுத்த வெள்ளகுளம் பகுதியில் காண்ட்ராக்டர் பாலமுருகன் தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் மார்ச் மாதம் 1ஆம் தேதி அதிகாலை 6 மணி அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல போலி அடையாள அட்டை காண்பித்து போலி ரெய்டு நடத்தி 116 சவரன் தங்க நகை, 2.50 லட்சம் ரொக்க பணம் மற்றும் சொத்து பத்திரங்கள் திருடப்பட்ட வழக்கில் 4 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இதனை அடுத்து இன்னோவா காரின் பதிவு எண் கண்டறியப்பட்டு அதுவும் போலியானதாக அறியப்பட்டது. இந்த நிலையில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த தனிப்படை போலீசார் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த கோயமுத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ரனேஷ் (46), பார்த்தசாரதி (45), நூறுலாஸ்கர்(46), பிரவீன்குமார் டேனியல்(55), வினோத்குமார் (42), சிவமுருகன் (52), நந்தகுமார் (39), ஊட்டியை சேர்ந்த பிரகாஷ் (29), மேட்டுப்பாளையம் கவிதா (30), பெங்களூரு வெங்கடேசன் (46), திருவள்ளூர் வசந்தகுமார் (39), திருநின்றவூர் செந்தில்நாதன் (42) ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த 5 லட்சத்து 51 ஆயிரம் ரொக்கப்பணம் 12 செல்போன் 2 கார், காவல்துறை சீருடை, அரசாங்கத்தின் லெட்டர்பேட் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து தனிப்படை போலீசார் 12 குற்றவாளிகளையும் ஆவடி ஆணையத்திற்கு உட்பட்ட செவ்வாபேட்டை காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர்.
போலி வருமானவரித் துறையின் அடையாள அட்டையை காண்பித்து காண்ட்ராக்டர் பாலமுருகன் வீட்டில் கொள்ளையடித்த போலி அதிகாரிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகை மற்றும் பணத்திற்கான ரசீது எழுதிக் கொடுத்து விட்டு பின்னர் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் மூன்றாவது மாடியில் தன்னை வந்து பார்க்கும்படி ஒரு தொலைபேசி எண்ணை கொடுத்து விட்டு சென்றனர்
இதனை துருப்பு சீட்டாக பயன்படுத்திய காவல்துறையினர் தொலைபேசி எண்ணின் சிக்னலை சைபர் கிரைம் காவல்துறை உதவியுடன் சோதித்தபோது மார்ச் 1ஆம் தேதி காலை 4:45 அளவில் பூந்தமல்லியில் இருப்பதாக தெரிந்தது (கொள்ளை சம்பவம் நடப்பதற்கு முன்) பின்னர் அந்த தொலைபேசி அழைப்பு கொள்ளை சம்பவம் நிகழ்ந்த பின்பு திருநின்றவூர் பகுதியில் காலை 6 மணி காட்டியதையும் அறிந்தனர்.
பின்னர் அந்த தொலைபேசி எண் கூவம் ஆற்றில் கொள்ளையர்கள் வீசிச் சென்றுள்ளனர்.
ஆனால் அவர்கள் பயன்படுத்திய போன் 2 சிம் கார்டு போடும் வசதி இருப்பதையும் அவர்கள் கொடுத்த தொலைபேசி எண்ணின் ஐஇஎம்ஐ சோதனை செய்த போது மற்றொரு தொலைபேசி எண்ணின் ஐஇஎம்ஐ கண்டுபிடித்தனர். அதன் சிக்னலை பயன்படுத்தி கோயம்புத்தூர் விரைந்த தனிப்படை போலீசார் இரண்டு நாள் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் இரண்டு கார்களில் மறைந்திருந்த கொள்ளையர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
திருவள்ளூர் காண்ட்ராக்டர் பாலமுருகன் பற்றிய தகவல் கொடுத்தவர் வெள்ளக்குளம் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார், கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் பிரவீன்குமார் டானியல், திருநின்றவூர் செந்தில்நாதன் பெங்களூரு வெங்கடேசன் ஆகியோர் ஏற்கனவே ரைஸ் புல்லிங் சம்பந்தப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், திருவள்ளூர் வசந்த குமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவடி சரக துணை ஆணையர் முத்துவேல் பாண்டியன் மேற்பார்வையில் செவ்வாய்ப் பேட்டை காவல் ஆய்வாளர் டில்லிபாபு தலைமையில் உதவி ஆய்வாளர்கள் குமரன், ஆனந்தராஜ், பிரதீப்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ், காவலர்கள் கனிமுத்து, முத்துகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படை குழு குற்றவாளிகளை கோயமுத்தூர் சென்று கைது செய்தனர்.