தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் உலக சிறுநீரக தினத்தையொட்டி சிறுநீரக நோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதனை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் உலக சிறுநீரக தினத்தையொட்டி இந்திய மருத்துவ கழக தஞ்சை கிளை மற்றும் தஞ்சை மாநகராட்சி சார்பில் சிறுநீரக நோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தலைமை தாங்கினார்.
துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, இந்திய மருத்துவ கழக கிளை தலைவர் டாக்டர் பாரதி, நிதி செயலாளர் டாக்டர் பாலமுருகன், மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர்கள் டாக்டர்கள் சிங்காரவேலு, இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் டாக்டர் கார்த்திகேயன் வரவேற்றார்.
முகாமை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு பல்வேறு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதில் சிறுநீரக நோய் நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறை நிபுணர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேலாளர் கிளமெண்ட், உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், இந்திய மருத்துவ கழக தஞ்சை கிளை முன்னாள் தலைவர் டாக்டர் சசிராஜ் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாநகராட்சி மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் நன்றி கூறினார்.