0 0
Read Time:3 Minute, 51 Second

தஞ்சை: பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். மாமன்னர் ராஜராஜசோழன் கி.பி.1010-ம் ஆண்டு இந்த கோவிலை கட்டி குடமுழுக்கு நடத்தினார். கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந்தேதி குடமுழுக்கு நடத்தப்பட்டது. இந்த கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் இன்றும் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது.

மேலும் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வரும் இந்த கோவிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டும் அல்ல, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள். இதனால் இங்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டீகேஸ்வரர், முருகன், கருவூரார், நடராஜர், மகா நந்தியம்பெருமான் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. கோடை காலத்தில் பெரியகோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமப்படாமல் இருக்கும் வகையில் ராஜராஜன்கோபுரத்தின் அருகே இருந்து பெருவுடையார் சன்னதிவரை தரைவிரிப்புகள் விரிக்கப்படும்.

மேலும் அந்த தரை விரிப்புகளும் சூடாகாமல் இருப்பதற்காக காலை மற்றும் மாலை நேரங்களில் அதன்மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது கோடை காலம் தொடக்க காலத்திலேயே வெயில் கொளுத்தி வருகிறது.

இந்த நிலையில் பெரியகோவில் தரைவிரிப்புகள் விரிக்கப்படாததால் பக்தர்கள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர். மேலும் பக்தர்கள் ராஜராஜன்கோபுரத்தை கடந்ததும், தரை சூடு தாங்காமல் பக்தர்கள் ஓடுவதை காணமுடிந்தது. அதையும் மீறி நடந்து சென்றால் கால் சூடு தாங்காமல் கொப்பளங்கள் ஏற்படும் நிலை ஏற்பட்டது. சிலர் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை அழைத்துச்செல்லும் போது மிகவும் சிரமப்பட்டவாறே அழைத்து செல்கிறார்கள்.

இதையடுத்து பெரியகோவிலை பராமரித்து வரும் இந்திய தொல்லியல் துறையினர் தரைவிரிப்புகளை நேற்று கோவில் வளாகத்தில் விரித்தனர். இதற்காக கேரளாவில் இருந்து தயாரிக்கப்பட்ட புதிய தரை விரிப்புகள் மதுரையில் இருந்து தஞ்சைக்கு வந்தது. அந்த தரைவிரிப்புகள் நேற்று கோவில் வளாகத்தில் விரிக்கப்பட்டது. 5½ அடி அகலம் உடைய தரை விரிப்புகள் ராஜராஜன் கோபுரத்தில் இருந்து பக்தர்கள் நடந்து செல்லும் பாதை முழுவதும் விரிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் கோவிலுக்குள் சிரமமின்றி நடந்து சென்று வந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %