தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும் திராவிட இயக்கமும் நிகழ்த்திய மாற்றங்களே பெண்களின் வளர்ச்சிக்கு காரணம் என்று மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா வணிக மேலாண்மை நிறுவனத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக மகளிரணிச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில் பேசிய அவர், பெண்கள் எந்த வகையான ஆடையை அணிந்திருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் சமூகம் உருவாக வேண்டும் என்றார்.
ஆண்களும் பெண்களுக்கு சமைத்துக் கொடுக்க வேண்டும் என கூறிய கனிமொழி, பெண்கள் தங்கள் கனவையும் லட்சியத்தையும் யாருக்காகவும் விட்டுத்தர வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை பாஜக நிறைவேற்ற மறுக்கிறது என்றும் கனிமொழி குற்றம்சாட்டினார்.
இதேபோல, சென்னை பிராட்வே பகுதி மரியாலையா கருணை இல்லத்தில் திமுக சார்பில் உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் அரசு கஜானாவை காலி செய்து சென்றுவிட்டதாக விமர்சனம் செய்தார். கடந்த 10 மாதங்களாக தமிழ்நாட்டை சிறப்பாக வழிநடத்திவரும் முதலமைச்சர் ஸ்டாலின், தேசத்திற்கே வழிகாட்டும் தலைவராக மாறியுள்ளதாக புகழாரம் சூட்டினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.