சென்னை, மீனம்பாக்கம் பன்னாட்டு சரக்கு விமான முனையத்துக்கு இலங்கையில் இருந்து விமானம் வந்தது. அதில் சென்னையில் உள்ள ஒரு நகை கடைக்கு வரும் பார்சலில் பெரிய அளவு வைரம், நீலநிற மற்றும் சிகப்பு நிற ரத்தின கற்கள் கடத்தி வரப்படுவதாக சிறப்பு புலனாய்வு துறையிடம் இருந்து சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய்பாஸ்கர் உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் அந்த பாா்சலை டெலிவரி கொடுக்காமல் தடுத்து நிறுத்தினாா்கள்.
அந்த பாா்சலை சோதனை செய்தபோது ரூ.5.85 லட்சம் மதிப்புள்ள செமி வைர கற்கள் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தது. ஆனால் சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் அந்த பாா்சலை திறந்து பாா்த்தனா்.
அந்த பாா்சலில் 204 காரட் கொண்ட வைர கற்கள், நீல நிற கற்கள் மற்றும் உயா் ரக ரத்தின கற்கள் இருப்பதை கண்டுபிடித்தனா். இவற்றின் மதிப்பு ரூ.4 கோடியே 43 லட்சம் ஆகும். இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் வைர கற்களையும், உயா் ரக ரத்தின கற்களையும் பறிமுதல் செய்தனா்.
மேலும் இந்த பாா்சலை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தவரின் வங்கி கணக்கையும், அதில் இருந்த ரூ.60 லட்சத்தையும் முடக்கியதுடன், அந்த நிறுவனத்தை சோதனையிட்டு ரூ.56 ஆயிரம் மற்றும் கணக்கு புத்தகங்களையும் கைப்பற்றி சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.