காவிரிப்படுகையில் சட்டவிரோதமாக ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைத்துள்ள ஓஎன்ஜிசி நிறுவனம் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோது, காவிரிப்படுகையில் சட்டவிரோதமாக ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைத்துள்ள ஓஎன்ஜிசி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், முந்தைய அதிமுக அரசும், தற்போதைய திமுக அரசும் அனுமதிக்காத நிலையில் காவிரிப்படுகையில் 21 ஹைட்ரோகார்பன் கிணறுகளை ஓஎன்ஜிசி எப்படி அமைத்தது எனக் கேள்வி எழுப்பினார்.பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டம்- 2020 இயற்றிய பிறகு, காவிரிப்படுகையில் புதிய எண்ணெய் – எரிவாயுக் கிணறு அமைப்பது சட்ட விரோதமானது என்றார்.
மேலும், ஓஎன்ஜிசி நிறுவனம் பழைய எண்ணெய்க் கிணறு அமைந்துள்ள வளாகங்களில் மராமத்து பணி என்ற பெயரில் புதிய கிணறுகளை அமைக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.