குத்தாலம்: மல்லியம் கிராமத்தில் பரிமள ரெங்கநாதர் முத்துப்பல்லக்கில் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறையில் பரிமளரெங்கநாதர் கோவில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவிலில் பஞ்ச அரங்க ஆலயங்களுள் 5-வது தலமாகும். சந்திரன் சாப விமோசனம் பெற்ற தலம் என இக்கோவிலின் தலவரலாறு கூறுகிறது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பங்குனி உத்திர திருவிழாவின்போது இக்கோவில் பரிமளரெங்கநாதர் மயிலாடுதுறை அருகே உள்ள மல்லியம் கிராமத்தில் முத்துப்பல்லக்கில் வீதி உலா வருவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் பங்குனி திருவிழாவையொட்டி மல்லியத்தில் பரிமளரெங்கநாதர் முத்துப்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பரிமளரெங்கநாத பெருமாள் அங்குள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.
முன்னதாக பெருமாளை கிராம எல்லையில் பொதுமக்கள் சீர்வரிசை எடுத்து வந்து பூர்ணகும்ப மரியாதையுடன் எதிர்கொண்டு அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.