பொறையாறு: மருத்துவ படிப்பை தொடர உதவ வேண்டும் என உக்ரைனில் இருந்து திரும்பிய செம்பனார்கோவில் மாணவி கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே ஆறுபாதி ஊராட்சி விளநகர் கிராமத்தை சேர்ந்த ஆசிரியர்கள் கோவிந்தராஜ், காந்திமதி. இவர்களுடைய இளைய மகள் சுவேதா (வயது21). இவர் உக்ரைன் நாட்டில் டெனிபுரோ நகரில் தங்கி, டெனிபுரோ மருத்துவ பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்தார்.
உக்ரைன்- ரஷியா போர் காரணமாக அங்கு சிக்கி தவித்த சுவேதாவை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி அவருடைய பெற்றோர் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக சுவேதா உக்ரைன் நாட்டில் மீட்கப்பட்டு நேற்று சொந்த ஊருக்கு பாதுகாப்பாக வந்தடைந்தார். அவரை பெற்றோர், உறவினர்கள் ஆரத்தழுவி வரவேற்றனர்.
உக்ரைனின் டெனிபுரோ நகரில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் ருமேனியா நாட்டிற்கு சென்றோம். போர் சூழல் காரணமாக கடும் சிரமத்துக்கு மத்தியில் சொந்த ஊர் திரும்பி உள்ளேன்.
உக்ரைன் எல்லையை கடப்பது மிகவும் சிரமமாக இருந்தது.
மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் நல்ல முறையில் வீட்டிற்கு வர முடிந்தது. பிரதமர் மோடி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதவிய அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவம் 3-ம் ஆண்டு படிக்கிறேன். எனது படிப்பை தொடர்வதற்கு அரசு உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.