நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க வார முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சி முடிந்ததும் மேடையில் இருந்து இறங்கிய மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், திடீரென அருகில் உள்ள 12-ம் வகுப்பறைக்குள் சென்றார். கலெக்டரை பார்த்ததும் அங்கு பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியரும், மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது, என்ன பாடம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்? எப்படி படிக்கிறீர்கள்? என்று மாணவிகளை பார்த்து கேட்டார். இதையடுத்து வேதியியல் புத்தகத்தை புரட்டி பார்த்த கலெக்டர், அதிலிருந்து சில கேள்விகளை மாணவிகளிடம் கேட்டார். அதில் ஒரு சிலர் பதிலளித்தனர். சிலர் பதில் சொல்லத் தயங்கினார். தொடர்ந்து அவர் புத்தகத்தை வைத்து மாணவிகளுக்கு பாடம் நடத்தினார்.
பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். கடினமாக உழைத்தால் தான் என்னைப்போல அதிகாரி ஆக முடியும். ஆர்வம் இல்லாமல் எந்த ஒரு செயலை செய்தாலும் அது முழுமை பெறாது.
வகுப்பறையில் கேள்வி கேட்டால், தவறாக இருந்தாலும் பரவாயில்லை முதலில் எழுந்து பதில் சொல்ல வேண்டும். ஆசிரியர் பாடம் நடத்தும் போது குறிப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பு எடுத்து படிக்கும் போது ஞாபக சக்தியானது அதிகரிக்கும். மேலும் ஒரு பாடத்தை படிக்கும் போது, அதில் உள்ள பேராவில் 2 வரியாவது ஞாபகம் வைத்துக்கொண்டால் தான் அந்தப் பாடம் புரியும். இதுதான் படிப்பதற்கு சுலபமான உத்தி.
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு என்பதால் தற்போது படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். நான் உங்களுக்கு ஒரு வாரம் நேரம் கொடுக்கிறேன். வரும் திங்கட்கிழமை இதேபோல் நான் வகுப்பறைக்கு வருவேன். நான் குறிப்பிட்டு சொன்ன பாடத்திலிருந்து தேர்வு வைப்பேன்.
தரவாக தங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.