முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குத் தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடு போன்ற வழக்குகள் உள்ள நிலையில், தற்போது வருமானத்திற்கும் அதிகமாக சொத்து குவித்ததாகப் புதிதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் எஸ்.பி.வேலுமணிக்குத் தொடர்புடைய 58 இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை, கோவை, சேலம் உள்பட 58 இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றது. இதில் கோவையில் மட்டும் 41 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. எஸ்.பி.வேலுமணி தனது பெயரிலும், உறவினர்கள், நண்பர்கள் பெயரிலும் ரூ.58.23 கோடி வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என்றும் மொத்த வருமானத்தில் 3928% அதிகமாக சொத்து சேர்த்து குவித்துள்ளார் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை தனது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இது டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கு. தற்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.