கொண்டல் ஊராட்சியில் பழுதான மின் மோட்டாரை சரி செய்து தொட்டியில் குடிநீர் நிரப்ப வேண்டும் என்பது அந்த பகுதி பொதுமக்களின் எதிர்பாப்பாக உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியம் கொண்டல் ஊராட்சிக்கு உட்பட்ட தேனூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆதமங்கலம் செல்லும் சாலையில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
இந்த குடிநீர் தொட்டி கிராம மக்களுக்கும், அந்த பகுதியில் உள்ள வயல்களில் வேலை செய்யும் விவசாய தொழிலாளர்களுக்கும் பயனுள்ளதாக இருந்து வந்தது.
இந்த குடிநீர் தொட்டி கடந்த சில ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாததால் தற்போது தண்ணீர் ஏற்றும் மின் மோட்டார் பழுதடைந்து கிடக்கிறது. எனவே குடிநீர் நிரப்ப முடியாமல் காட்சி பொருளாக தொட்டி இருந்து வருகிறது. மேலும் குடிநீர் தொட்டியை சுற்றி செடி, கொடிகள் மண்டி கிடக்கிறது. இதனால் இந்த பகுதி பொதுமக்களும், விவசாய தொழிலாளர்களும் குடிநீர் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து பழுதான மோட்டாரை சரி செய்து தொட்டியில் குடிநீர் நிரப்பி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவார்களா? என்பது அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.