தமிழகத்தில் இரண்டாம் நிலை போலீசார் பணியிடங்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேற்று முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலக வளாகத்தில் உள்ள தற்காலிக போலீசார் பயிற்சி பள்ளியில் 213 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், கரூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து பயிற்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த பயிற்சியை போலீசார் பயிற்சி பள்ளி முதல்வரும், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுமான ரவளிபிரியா தொடங்கி வைத்து பேசினார். இதில் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு அமலதாஸ், சட்ட போதகரான இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி, கவாத்து போதகரான இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, உதவி சட்ட போதகர்கள் மற்றும் உதவி கவாத்து போதகர்களான சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராணி, ரவிச்சந்திரன், செந்தமிழன், புவனேஸ்வரி ஆகியோர் பயிற்சி அளிக்கிறார்கள்.
இவர்களுக்கு 7 மாதம் பயிற்சி அளிக்கப்படுகிறது.இதில் ஒருமாதம் செயல்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி அக்டோபர் மாதம் 13-ந்தேதி வரை நடைபெறுகிறது.