சிதம்பரம், புதுச்சத்திரத்தை அடுத்த பெரியகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வருபவர் பாலமுருகன்.
இவர் சம்பவத்தன்று பணியில் இருந்தபோது 2 மர்ம நபர்கள் கம்பெனிக்குள் புகுந்து அங்கிருந்த தாமிர கம்பிகளை திருடிக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்த பாலமுருகன் அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றார். இதில் ஒருவர் பிடிபட்டார். இன்னொருவர் தப்பி ஓடி விட்டார்.
பின்னர் பிடிப்பட்ட நபரை புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் சீதாகுப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகன் பாபு(வயது 37) என்பதும், தப்பி ஓடியவர் அதே ஊரை சேர்ந்த கந்தவேல்(வயது 30) என்பதும், இருவரும் தாமிர கம்பிகளை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து பாபுவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தாமிர கம்பிகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய கந்தவேலுவை வலைவீசி தேடி வருகின்றனர்.