0 0
Read Time:3 Minute, 0 Second

நிரந்தர வகுப்பறை கட்டிடம், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி குத்தாலம் அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா மாதிரிமங்கலம் ஊராட்சி சிவராமபுரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்த கல்லூரிக்கு என தனியாக இடம் ஒதுக்கப்படாத நிலையில் மாதிரிமங்கலம் கிராம சேவை மைய கட்டிடத்தில் கல்லூரி தொடங்கப்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் முதல் மற்றும் 2-ம் ஆண்டு கல்வி பயின்று வருகின்றனர்.

கல்லூரி இயங்கும் கட்டிடத்தில் மாணவர்கள் அமர்ந்து பயில்வதற்கு வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் இட நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். மேலும் அடிப்படை தேவையான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் மாணவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் கல்வி துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நிரந்தர வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் சரிவர செய்து தர எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

போதிய பேராசிரியர்கள் இல்லை எனவும் கூறி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் தலைமையில் மயிலாடுதுறை – கும்பகோணம் சாலையில் திருவாலங்காடு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குத்தாலம் தாசில்தார் பிரான்சுவா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அடிப்படை வசதிகளுடன் உள்ள கட்டிடத்திற்கு கல்லூரியை இடமாற்றம் செய்வதாகவும், கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கு விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அரசு அனுமதியுடன் கல்லூரிக்கு கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி உறுதி அளித்தனர்.

அதன்பேரில் 2 மணி நேரம் நடந்த சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %