கடலூர், வேப்பூர் அருகே க.குடிகாடு கிராமத்தில் உள்ள குளத்திற்கு தண்ணீர் செல்லும் நீர்வரத்து வாய்க்காலை ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டி இருந்தனர்.
மேலும் சிலர் பயிர் சாகுபடி செய்திருந்தனர். இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அதே பகுதியை சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இதையடுத்து ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர் உடனே அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி வேப்பூர் தாசில்தார் மோகன் தலைமையிலான வருவாய்த்துறையினர் நேற்று 5 பொக்லைன் எந்திரங்களுடன் க.குடிகாடு சென்றனர்.
பின்னர் அவர்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும் குளத்திற்கு தடையின்றி தண்ணீர் செல்லும் வகையில் வாய்க்காலும் அமைத்து கொடுத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.