தரங்கம்பாடி, மார்ச்- 18;
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, ஆறுபாதி ஊராட்சி, மேட்டிருப்பு பகுதி, செம்பனார்கோவில் காவல் நிலையத்திற்கு எதிர்புறம் சுமார் 20 -க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் தங்கியுள்ளனர். சிறு கூடாரங்கள் அமைத்து, அதில் தங்கி பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் கண் திருஷ்டி பொம்மைகள் விற்பனை செய்தும் வாழ்வாதாரம் ஈட்டி வருகின்றனர்.
இவர்களுக்கு எந்த ஒரு அடையாள சான்றுகளோ, குடும்ப அட்டையோ இல்லாமல் அத்தியாவசிய பொருள்கள் பெற முடியாமல் வாழ்ந்து வந்தனர். இவர்கள் தங்களுக்கு அடையாள சான்றுகள் மற்றும் நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் பெறவும் அரசு நிவாரணங்கள் பெறவும் குடும்ப அட்டை வேண்டும் என்றும் பல ஆண்டு கோரிக்கையாக கேட்டு வந்தனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் ஆகியோர் உத்தரவின் பேரில் ஆறுபாதி மேட்டூரில் உள்ள நாடார் திருமண மண்டபத்தில் ஆதார் எடுக்கும் சிறப்பு முகாம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் நடத்தப்பட்டு, அதில் அனைத்து பழங்குடியினர் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆதார் எடுக்கப்பட்டது.
ஆதார் வரப்பெற்ற குடும்பங்களுக்கு முதற்கட்டமாக ஆறுபாதி மேட்டிருப்பு தங்கியுள்ள பழங்குடியின 15 குடும்பங்களில் தற்போது 7 குடும்பங்களுக்கு புதிய குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. இதனை தரங்கம்பாடி வட்டவழங்கல் அலுவலர் பாபு மற்றும் துறை அதிகாரிகள் நேரில் சென்று அவர்களிடம் வழங்கினர்.
இதில் தனி வருவாய் ஆய்வாளர் மரிய ஜோசப் ராஜ், ஆறுபாதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் முகமது அசார், வட்ட பொறியாளர் ஐயப்பன், நுகர் பொருள் அங்காடி விற்பனையாளர்கள் முத்து, கணேசன், சீதாராமன் மற்றும் ஜெகதீஷ் உடன் இருந்தனர். பல ஆண்டு கோரிக்கை நிறைவேறிய பெரும் மகிழ்ச்சியில் இருந்த பழங்குடியின குடும்பங்கள் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு ஆகியோர்களுக்கு பழங்குடியினர் குடும்பத்தினர் நன்றிகளை தெரிவித்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.