திருக்கடையூருக்கு பாதயாத்திரை செல்லும் தருமபுர ஆதீன மடாதிபதிக்கு சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஆக்கூர் பள்ளிவாசல் சார்பில் இஸ்லாமியர்கள், துவா செய்து வரவேற்றனர், கிறிஸ்தவ பாதிரிமார்கள் பங்கேற்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தருமபுர ஆதீன 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், வெள்ளிக்கிழமை ஆதீன மடத்தில் இருந்து ஆதின பூஜா மூர்த்தியாகிய சொக்கநாதப் பெருமான் உடன் குரு லிங்க சங்கம பாதயாத்திரையை துவக்கினார்.
இரண்டாம் நாளாக நேற்று பாதயாத்திரை காலஹஸ்தினாபுரத்தில் இருந்து துவங்கியது. ஆக்கூர் ஊராட்சியை நோக்கி பாதயாத்திரை சென்ற பொழுது ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் தலைமையில் சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஆக்கூர் பள்ளிவாசல் சார்பில் ஜமாத்தார்கள் தருமபுர ஆதீன மடாதிபதிக்கு மரியாதை செய்து வரவேற்றனர். ஜமாத்தார்களுக்கு ஆதீனம் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து இஸ்லாமியர்கள் சிறப்பு துஆ செய்தனர். இதனையடுத்து ஆக்கூர் டி.இ.எல்.சி. திருச்சபையைச் சார்ந்த பாதிரியார்கள் வரவேற்பு அளித்தனர். பாதயாத்திரையில் வந்தவர்களுக்கு இஸ்லாமியர்கள் குடிநீர் வழங்கினர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.