தரங்கம்பாடி, மார்ச்- 21;
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அடுத்து காலமநல்லூர் ஊராட்சி மஞ்சள் ஆற்றின் குறுக்கே ரூ. 789 லட்சம் மதிப்பீட்டில் புதிய கடைமடை நீர் தேக்கி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
தரங்கம்பாடி தாலுகா காலமநல்லூர் ஊராட்சியை சார்ந்த கிடங்கள், மருதமபள்ளம், மாமாகுடி, பிள்ளைபெருமாநல்லூர், திருக்கடையூர், ஆகிய கிராமங்களில் உள்ள பாசன நிலம் யாவும் மஞ்சள் ஆற்றின் கடைமடை பகுதிகளாக உள்ளது. மஞ்சளாறு வங்காள விரிகுடா கடலில் கலக்குமிடம் வரை 5.500 கி.மீட்டர் நீளத்திற்கு மஞ்சளாற்றின் குறுக்கே எவ்வித கட்டுமானங்களும் அமைக்கப்படவில்லை.
இதனால் கடலில் அதிகப்படியான கடல் அலை வரும் போது கடல் நீரானது மஞ்சளாறு முகத்துவாரம் வழியாக உட்புகுந்து கடைமடை 5.500 கி.மீட்டர் நீளத்திற்கும் கடல் நீர் தேங்கிவிடுகிறது .எனவே மஞ்சளாறு கரை ஓரம் உள்ள விளைநிலங்கள் யாவும் உவர் நிலங்களாக மாறி வருகிறது. எனவே அதனை தடுக்கும் விதமாக மஞ்சள் ஆற்றின் குறுக்கே நீரொழுங்கி அமைத்து தருமாறு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இதனை ஏற்ற தமிழக அரசு ரூ.789 இலட்சம் மதிப்பில் புதிய நீரொழுங்கி கட்டுவதற்கான அரசாணை வெளியிட்டது.
அதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதில், செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், துணைத்தலைவர் மைனர் பாஸ்கர், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் பாண்டியன், பொறியாளர் விஜய் பாஸ்கரன், உதவி பொறியாளர் விவேகானந்தன், ஒன்றிய திமுக செயலாளர்கள் அப்துல் மாலிக், பி.எம்.அன்பழகன், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் மு.ஞானவேலன், மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.