விருத்தாசலம் பஸ் நிலையத்தில் 14 பங்க் கடைகள், 2 உணவகங்கள், 32 இதர கடைகள் என நகராட்சிக்கு சொந்தமாக மொத்தம் 48 கடைகள் இயங்கி வருகின்றன. இதில் 32 கடைகளின் குத்தகைதாரர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சுமார் ரூ.29 லட்சம் வரி பாக்கியை கடந்த 10 மாதத்துக்கு மேலாக செலுத்தாமல் இருந்து வந்தனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியும் வரியைக் கட்டாமல் அலட்சியம் காட்டி வந்தனர்.
இந்நிலையில் நகராட்சி ஆணையாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று நகராட்சி்க்கு சொந்தமான அனைத்து கடைகளிலும் வரிபாக்கியை வசூல் செய்யும் பணியை அதிரடியாக மேற்கொண்டனர். இதில் ரூ.16 லட்சம் வரிபாக்கி வசூல் செய்யப்பட்டது. அப்போது வரி பாக்கியை செலுத்தாத 7 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
தொடர்ந்து வரி பாக்கி ஏதேனும் இருந்தால் உடனடியாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் கடைகளுக்கு நிரந்தரமாக சீல் வைக்கப்படும். பஸ் நிலையத்தை தொடர்ந்து காய்கறி மார்க்கெட் மற்றும் தொழில் வரி கட்டாத அனைத்து கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என நகராட்சி ஆணையர் ஜெயபிரகாஷ் நாராயணன் எச்சரிக்கை விடுத்தார்.