இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு பஞ்சம் நிலவி வருவதால், அங்கு அத்தியாவசிய தேவையான உணவு பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்திருப்பது அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் பாதிப்படைய வைத்திருகிறது. அங்கு ஒரு கிலோ அரசியின் விலை 200 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது. ஒரு முட்டையின் விலை 35 ரூபாய்க்கும், பெட்ரோல், டீசலின் விலை 250 ரூபாயையும் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. அங்கு 90 சதவீத ஹோட்டல்கள் மூடப்பட்டிருப்பதுடன், தலைநகர் கொழும்பு உட்பட பல மாநிலங்கள் பல மணி நேரம் இருளில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இப்படி அதள பாதாளத்திற்கு சென்று கடனில் சிக்கித் தவிப்பதற்கான காரணம் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, எப்படியெல்லாம் இலங்கைக்கு வருமானம் கிடைத்தது? ஏன் இப்போது வரவில்லை என்பது குறித்தும் பார்க்க வேண்டியது அவசியம். இலங்கையின் வருமானம் என்பது அங்கு உற்பத்தி செய்யப்படும் ஆடைகள், தேயிலை மற்றும் சுற்றுலா இதன் மூலம் தான் அதிகளவு கிடைக்கிறது. இந்த மூன்றை நம்பியே இலங்கை மக்கள் இருந்து வந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு உலகத்தையே ஆட்டிப்படைத்த கொரோனா, இலங்கையை மட்டும் விட்டு வைக்குமா என்ன? கொரோனாவின் கோரத் தாண்டவத்தை கட்டுப்படுத்த இலங்கை உட்பட பல நாடுகளும் சர்வதேச போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தினர். இதனால் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த தேயிலை, ஆடைகள் தேங்க ஆரம்பித்தது. அதுமட்டுமின்றி சர்வதேச எல்லைகள் மூடப்பட்டு, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சுற்றுலா துறை முற்றிலும் முடங்கியது.
எல்லா நாடுகளும் இந்த கொரோனா காலகட்டத்தில் பல இன்னல்களை சந்தித்து பொருளாதாரத்தில் சற்று பின்னடைவுக்கு தள்ளப்பட்டாலும், நாட்டிற்கு வரும் வருமானத்திற்கான அனைத்து கதவுகளும் இலங்கைக்கு மூடப்பட்டதால், அந்நாட்டின் பொருளாதாரம் பிற நாடுகளை காட்டிலும் பெரும் பின்னடைவுக்கு தள்ளப்பட்டது. இலங்கையின் அன்னிய செலாவனி கிட்டத்தட்ட 1.6 பில்லியன் டாலராக குறைந்து விட்டது. இலங்கைக்கான வரவு குறைய குறைய, மத்திய கையிருப்பில் இருந்த அன்னிய செலாவனியும் வீழ்ச்சியடைந்ததால், பொருளாதார நெருக்கடியை சந்தித்தது இலங்கை. இதற்கும் விலைவாசிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், அன்னிய செலாவனியின் இருப்பு குறைந்ததால், இலங்கை மத்திய வங்கியானது ரூபாயின் மதிப்பை குறைத்திருக்கிறது. இதனால் பொருட்களின் விலை படிப்படியாக உயரத் துவங்கியிருக்கிறது. ஒரு டாலருக்கு இலங்கையின் ரூபாய் மதிப்பு 200 ரூபாயில் இருந்து 225 ரூபாய் சரிந்திருக்கிறது. இதனால் தான் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட உயர்ந்திருக்கிறது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் இலங்கை இறக்குமதியையே நம்பியிருக்கிறது. ஆனால் அவ்வாறு இறக்குமதி செய்யும் பொருட்களை வாங்க இலங்கையிடம் பணம் இல்லை. அதனால் தான் பொருட்களின் இருப்பு குறைந்து அதன் விலையும் அதிகரித்திருக்கிறது. கோழிக்கான தீவனம் கூட அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. நாட்டோட முக்கியமான மின் உற்பத்தி நிலையங்கள் கூட டீசலால் இயங்கக் கூடியது என்பதால், நிலையங்களில் மின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மூடப்பட்டுள்ளது. அதனால் தான் அங்கு கொழும்பு உட்பட பல இடங்களில் அதிக நேர மின்வெட்டு ஏற்படுகிறது. இலங்கையில் இதற்கு முன்பு 1970-ம் ஆண்டுகளில் காணப்பட்ட பஞ்ச நிலையை காட்டிலும், இப்போது ஏற்பட்டிருக்கக் கூடிய பொருளாதார நிலை மோசமானது என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். 1970 களில் நிலவிய பஞ்சத்திற்கு காரணம் அன்று இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது தான் எனக் கூறப்படுகிறது. டாலர் தட்டுப்பாடு தான் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இலங்கைக்கு சுமார் 51 பில்லியன் டாலர் கடன் இருப்பதாகவும், அதில் 7 பில்லியன் டாலர்கள் மட்டும் இந்தாண்டு செலுத்த வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இலங்கை வசம் 2.3பில்லியன் அமெரிக்கா டாலர் மட்டுமே கையிருப்பில் இருப்பதாக தெரிகிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் மற்றும் நட்பு நாடுகளிடம் உதவியை நாடியிருக்கிறது இலங்கை. 1பில்லியன் அமெரிக்கா டாலர் வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி ஐஎம்எஃப்சி எனப்படும் சர்வதேச செலாவனி நிலையத்தையும் இலங்கை அனுகியிருக்கிறது. அதன் நிர்வாகிகளை இலங்கை அதிபர் கோத்பய ராஜபக்சே சந்தித்து பேசியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பு ஐஎம்எஃப்சி-கிட்ட இருந்து கடனே வாங்க மாட்டோம் எனக் கூறிக் கொண்டிருந்த அவர், தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றியிருக்கிறார். 190 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த அமைப்பு கடன் கொடுத்து உதவினால் இலங்கையின் பொருளாதாரம் சற்று மீட்டெடுக்கப்படும்.
ஆனால் ஐஎம் எஃப்சியின் முதல் விதி நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க வரி விகிதத்தை உயர்த்த வேண்டும் என்பது. அப்படி வரி விகிதம் உயர்த்தப்பட்டால், இலங்கையில் பொது மக்களின் மீது சுமை மேலும் சுமத்தப்படும்.