மயிலாடுதுறை, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய ஆணையர்கள் முதல் பணியாளர் வரை பணி புறக்கணிப்பு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமை தாங்கினார்.
இதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியனை தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்து அவரை பணி ஓய்வில் செல்ல உரிய ஆணை வழங்க வேண்டும்.
கிராம ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல் மற்றும் மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள அனைத்து உரிமைகளையும் கிராம ஊராட்சி செயலர்களுக்கு வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்கள் அனைவருக்கும் ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையின்படி இளநிலை உதவியாளர்களுக்கான இணையான ஊதியம் நிர்ணயம் செய்து பணி வரன்முறை செய்ய வேண்டும்.
முழு சுகாதார திட்ட வட்டார மாவட்ட ஒருங்கிணைப்பாளர் களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையிலிருந்து உதவி இயக்குனர் நிலையிலான பதவி உயர்வு அணைகளை மேலும் கால தாமதமின்றி உடனே வழங்க வேண்டும். வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணி மேற்பார்வையாளர்கள் பணியிடங்கள் அனைத்தையும் தேர்வாணையம் மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி புரியும் ஆணையர்கள், பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கணக்கர், இளநிலை உதவியாளர், உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள்உள்ளிட்ட யாரும் பணிக்கு வராததால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
இதன் காரணமாக பொதுமக்கள், 100 நாள் வேலை திட்டம், பாரத பிரதமர் வீடு கட்டும் பயனாளிகள், உள்ளிட்ட பல்வேறு திட்ட பயனாளிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகினர்.