தரங்கம்பாடி, மார்ச்- 23;
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் புகழ்பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. அஷ்ட வீரட்ட தலங்களில் ஒன்றான இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் வரும் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதன்கிழமை பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், பாண்டிச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா ஆகியோர் ஆலயத்திற்கு வருகைதந்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அவர்களுக்கு ஆலயம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தருமபுர ஆதீன 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றனர்.
தொடர்ந்து சுவாமி அம்பாள் சன்னதிகளில் பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு ஆலய நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக தினத்தன்று புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத்துக்கு விமான சேவையை துவங்க உள்ளதால் கும்பாபிஷேகத்தை நேரில் காண வர முடியாது ஆகையால் முன்னதாக சாமி தரிசனம் செய்ததாக அப்போது செய்தியாளர்களிடம் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
மேலும் காரைக்காலிலிருந்து தரங்கம்பாடி வழியாக ரயில் சேவை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். கொரோனா குறைந்து வரும் நிலையில் பக்தர்கள் கும்பாபிஷேகங்களில் பெருமளவு தடுப்பு ஊசி செலுத்தி பங்கேற்க வேண்டும் என்று அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.