0 0
Read Time:3 Minute, 23 Second

விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தற்போது சம்பா அறுவடை பணி நடந்து வருவதால், சாத்துக்கூடல் மேல்பாதி, கீழ்பாதி, க.இளமங்கலம், ஆலிச்சிக்குடி, முகுந்தநல்லூர், தீவலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நெல் மூட்டைகளை விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு எடுத்து வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

இங்கு வரும் விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகள் ஆன்லைன் மூலம் பதிவெற்றம் செய்யப்பட்டு அதனடிப்படையில் கொள்முதல் செய்யும் பணி நடந்து வருகிறது.

இதில், ஒருசிலர் அறுவடை செய்வதற்கு முன்பே ஆன்லைனில் பதிவு செய்து விடுகின்றனர். அவ்வாறு பதிவு செய்து விடுவதால் அவர்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்த உடன், எடுத்து வந்த நெல் மூட்டைகளை விற்பனை செய்து விட்டு சென்று விடுகின்றனர்.

ஆனால் முறையாக அறுவடை செய்த பிறகு ஆன்லைனில் பதிவு செய்துவிட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல்லைக் கொண்டு வரும் விவசாயிகள் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், கடந்த 40 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் தங்களது நெல்லை கொள்முதல் நிலைய வளாகத்தில் குவித்து வைத்து விட்டு, இரவு பகல் பாராமல் வெயில், பனியில் காத்துக் கிடக்கின்றனர். இதன் மூலம் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது.

இதுகுறித்து கடந்த ஒரு மாதமாக நெல் மூட்டைகளுடன் நேரடி கொள்முதல் நிலையத்தில் காத்திருக்கும் விவசாயி அய்யாசாமி என்பவர் கூறுகையில், நான் ஒரு மாதத்துக்கு முன்பே நெல் மூட்டைகளை இங்கு எடுத்து வந்துவிட்டேன். மழை, பனியில் இரவு பகல் பாராமல் காத்திருந்து வருகிறேன். இன்னும் நான் எடுத்து வந்த மூட்டைகள் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் நெல் முளைத்து வீணாகி வருகிறது.

மேலும், இங்கு விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு மூட்டை ஒன்றுக்கு 50, 55 ரூபாய் பணம் கேட்கிறார்கள். நேரடி நெல் கொள்முதல் நிலையம் சரியாக இயங்கவில்லை.

இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %