ராமநத்தம் அருகே உள்ள எழுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ஆறுமுகம் (வயது 38). விவசாயி. இவர் நேற்று ராமநத்தத்தில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று, தனது கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்தை எடுத்தார்.
பின்னர், அந்த பணத்தை தொழுதூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கட்டுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பணம் இருந்த பையை தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்ரோல் டேங்க் கவரில் வைத்திருந்தார்.
ராமநத்தம் டாஸ்மாக் அருகே சென்ற போது, அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் அந்த பகுதியில் 500, 200, 100 ரூபாய் நோட்டுகளை கீழே போட்டனர். இதை பார்த்த ஆறுமுகம் தனது வண்டியை நிறுத்தி, கீழே கிடந்த ரூபாய் நோட்டுகளை எடுக்க முயன்றுள்ளார்.
இந்த நிலையில், மர்ம நபர்கள் 2 பேர், ஆறுமுகத்தின் மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.2 லட்சத்தை திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். இதன் பின்னர் தான் தனது கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் மர்ம நபர்கள் பணத்தை சாலையில் போட்டு சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஆறுமுகம் ராமநத்தம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.