0 0
Read Time:2 Minute, 47 Second

சேத்தியாத்தோப்பு, நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் பழுப்பு நிலக்கரி எடுப்பதற்காக, சுரங்க விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல்வேறு கிராமங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில் சேத்தியாத்தோப்பு அடுத்த கத்தாழை ஊராட்சி கரிவெட்டி, வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் உள்ள விளைநிலங்களை கையகப்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அந்த நிலங்களை அளப்பதற்காக நேற்று என்.எல்.சி. நிர்வாக நில எடுப்பு சப்-கலெக்டர் சிவக்குமார், தாசில்தார்கள் சத்ரியன், ரவிச்சந்திரன், சுமத்திரா சையத் அப்தாஹர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கரிவெட்டி பகுதிக்கு வந்தனர்.

இதுபற்றி அறிந்த கிராம மக்கள் மற்றும் பா.ம.க. மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ், மாவட்ட தலைவர் தேவதாஸ் படையாண்டவர், வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் செல்வராசு மற்றும் நிர்வாகிகள், நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அவர்கள் வளையமாதேவியில் இருந்து கரிவெட்டி கிராமத்துக்குள் வரும் சாலையில் அமர்ந்து கருப்புக்கொடி ஏந்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள், கிராம மக்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். ஆனால் கிராம மக்கள், தங்கள் பகுதி இளைஞர்களுக்கு என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை வழங்க வேண்டும் அப்போது தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம், அது வரையில் நிலத்தை அளவீடு செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.

இதனால் அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியை கைவிட்டு அங்கிருந்து திரும்பி சென்றனர். அதன்பிறகு கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %