0 0
Read Time:6 Minute, 4 Second

கடலூர் மாநகராட்சியின் முதல் கூட்டம் நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மேயர் சுந்தரி தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்நல அலுவலர் அரவிந்த் ஜோதி வரவேற்றார்.

கூட்டத்தில் மேயர் சுந்தரி பேசுகையில், கடலூா் மாநகராட்சியில் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கும், சாலை, தெரு மின்விளக்கு மற்றும் அடிப்படை வசதி முழுமையாக கிடைப்பதற்கும், குப்பையில்லா மாநகராட்சியாக மாற்றுவதற்கும் அனைத்து நடவடிக்கையையும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்படும்.

மேயர் நடந்து செல்லவும் அந்த பகுதிகள் அனைத்தும் சினிமாவில் வருவது போல பசுமையாக மாறி விடாது. அதற்கு அனைத்து கவுன்சிலர்களின் ஒத்துழைப்போடு திட்டங்கள் தீட்டி செயல்படுத்த வேண்டும். மேலும் கடலூரை முன்மாதிரி மாநகராட்சியாக மாற்ற பாடுபடுவேன் என்றார். இதை தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

கீதா (தி.மு.க.) :- 2-வது வார்டு பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும். மாணவர்களின் வசதிக்காக நூலகம் அமைக்க வேண்டும்.
மேயர் சுந்தரி:- உங்கள் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் பேசி விரைவில் தீர்வு காணப்படும்.

அருள்பாபு (த.வா.க.) :- கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) மோதிக் கொண்டனர். இது தொடர்பாக தினத்தந்தி நாளிதழில் செய்தி பிரசுரமானது. அதனடிப்படையில் பள்ளி முடியும் நேரத்தில் போலீசார் பள்ளிகளின் அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

மேலும் மஞ்சக்குப்பம் மைதானம் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும்.
கண்ணன் (த.வா.க.) :- கடலூர் மாநகராட்சியில் அனைத்து மன்ற உறுப்பினர்களுக்கும் மாநகராட்சியின் செயல்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து சிறப்பு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மாநகராட்சியில் செயல்படாமல் உள்ள 160 பேட்டரி வாகனங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

சரவணன் (பா.ம.க.) :- 24-வது வார்டு தங்கராஜ் நகரில் நிரந்தர வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும். குடியிருப்பு பகுதியில் தற்காலிக குப்பை கிடங்கு அமைக்க அனுமதிக்க கூடாது.

சரஸ்வதி(காங்கிரஸ்):- ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலையின் மேலே புதிதாக சாலை அமைப்பதால் வீடுகள் அனைத்தும் சாலை மட்டத்தில் இருந்து கீழே இருக்கின்றன. இதனால் மழைக்காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. ஆகவே புதிதாக சாலை அமைக்கும்போது சேதமடைந்த சாலைகளை தோண்டிய பிறகு அமைக்க வேண்டும்.

சங்கீதா(அ.தி.மு.க.):- 27-வது வார்டு பகுதியில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. மக்கள் காசு கொடுத்து தான் குடிநீர் வாங்க வேண்டிய நிலை உள்ளது. அதனை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடலீஸ்வரர் கோவில் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும்.

மேலும் அனைத்து கவுன்சிலர்களும் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது, கடலூர் மாநகராட்சியின் 45 வார்டுகளிலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அதனை அகற்ற துப்புரவு ஊழியர்கள் முறையாக வருவதில்லை. மேலும் குப்பைகளை குடியிருப்பு பகுதியில் வைத்து தீ வைத்து கொளுத்துவதால், புகை மண்டலமாக காணப்படுகிறது.

இதனால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. ஆகவே குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து கவுன்சிலர்களும் வலியுறுத்தினர்.அதற்கு மேயர் சுந்தரி, 45 வார்டுகளையும் நேரில் பார்வையிட்டதும், கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குப்பைகளை கொட்டுவதற்கு இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது.

அந்த பணி முடிந்ததும் முறையாக அகற்றப்படும் என்றார். கூட்டத்தில் மாநகராட்சி உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %