மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் யானைக்கு மின்விசிறி வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த மின்விசிறிகள் கொட்டகை வாசலில் பொருத்தப்பட்டு உள்ளது.
மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற மயூரநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 60 வயதானஅவையாம்பாள் என்ற யானை கடந்த 50 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
விழாக்காலங்களில் உற்சவமூர்த்தி புறப்பாட்டின்போது சுவாமிக்கு முன்பு யானை அவையாம்பாள் சென்றால்தான் விழா களைகட்டும் என்று பக்தர்கள் பெருமையாக பேசி வருகின்றனர்.
கடந்த 50 ஆண்டுகளாக மயிலாடுதுறை மக்களின் செல்லப்பிள்ளையாகவே யானை அவையாம்பாள் கொண்டாடப்பட்டு வரப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு யானை ஆர்வலர் ஒருவர் இந்த யானைக்கு கோடைக்காலத்தில் சாரல் மழை போல கொட்டுவது போல ஷவர் வசதி ஏற்படுத்தி தந்தார்.
கடந்த ஆண்டு ஒருவர் யானைக்கு வெள்ளிக்கொலுசு அணிவித்து அழகு பார்த்தார். இந்த நிலையில் மயிலாடுதுறையில் கடந்த ஒரு வாரமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த வெயிலின் தாக்கத்தால் மனிதர்கள் படும் அவதியோடு, யானையின் அவதியையும் சிந்தித்த வனவிலங்கு ஆர்வலர் குரு.சம்பத்குமார் என்பவர் மயிலாடுதுறை யானை கொட்டகையில் 2 மின்விசிறிகள் அமைத்துத் தந்துள்ளார்.
50 ஆண்டுகளாக இல்லாத வகையில் கொட்டகையில் காற்று வீசுவதால் யானை அவையாம்பாள் ஈக்களின் தொந்தரவு நீங்கி, குதூகலமடைந்து, அடிக்கடி உற்சாகமாக பிளிறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறது.