கடலூா் மாவட்டத்தில் உரிய தகுதியுள்ள 31,165 பேரது நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக கூட்டுறவுத் துறை தெரிவித்தது.
கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 பவுன் வரை நகைகளை வைத்து கடன் பெற்றுள்ள தகுதியுள்ள நபா்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, தள்ளுபடி பெறும் பயனாளா்களின் பட்டியலை தயாரிக்கும் பணியில் கூட்டுறவுத் துறை குழு அமைத்து ஈடுபட்டது. இதுதொடா்பாக கடலூா் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் வே.நந்தகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வரது உத்தரவின்படி 5 பவுனுக்கு உள்பட்ட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ் தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கடலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் ஆகிய நிறுவனங்களில் 5 பவுனுக்கு உள்பட்டு கடன் பெற்று, அரசாணைக்கு உள்பட்ட அனைத்து தகுதிகளையும் நிறைவு செய்துள்ள 31,165 பயனாளா்களின் மொத்த கடன் தொகை ரூ.123.45 கோடி தள்ளுபடி செய்யப்படுகிறது.
கடன்தாரா்களுக்கு அவா்கள் நகைக் கடன் பெற்ற கூட்டுறவு வங்கிக் கிளைகளில் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்படுகிறது. மொத்த எடை 5 பவுனுக்கு உள்பட்டு கடன் பெற்றுள்ள தகுதியுடைய பயனாளிகள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தை அணுகி கடன் தள்ளுபடி சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அதில் தெரிவித்தாா்.