மயிலாடுதுறை, அருகே பட்டமங்கலத்தை அடுத்த ஊர்குடி கீழத்தெருவை சேர்ந்த சந்திரசேகரன் மகன் முரளி(வயது 26). கூலித்தொழிலாளி. இவருடைய எதிர்வீட்டில் வசித்து வருபவர் ஜெகதீசன் என்கிற தேவதாஸ்(36). மாற்றுத்திறனாளியான இவரும் கூலித் தொழிலாளி ஆவார்.
கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி இரவு தேவதாஸ் சைக்கிளை முரளி எடுத்துச்சென்று பழுதாக்கியது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தகராறாக மாறியது.
அப்போது ஆத்திரம் அடைந்த தேவதாஸ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளியை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முரளி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவதாசை கைது செய்தனர். இந்த வழக்கு மயிலாடுதுறை கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் நேற்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், முரளியை கொலை செய்த தேவதாசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு வக்கீல் ராம.சேயோன் ஆஜரானார்.