0 0
Read Time:4 Minute, 11 Second

நெல்லிக்குப்பம் நகராட்சியில் 30 வார்டில் 11 வார்டுகளில் தி.மு.க.வும், அ.தி.மு.க. 3, வி.சி.க. 2, காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க., ம.ம.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், த.வா.க., ம.தி.மு.க. ஆகியன தலா ஒரு வார்டுகளிலும், சுயேச்சை 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

இந்த நகராட்சி தலைவர் பதவி தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து தலைவர் பதவிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கிரிஜா திருமாறன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஆனால் கடந்த மாதம் 26-ந்தேதி நடந்த மறைமுக தேர்தலின் போது, போட்டி வேட்பாளராக களம் கண்ட தி.மு.க.வை சேர்ந்த ஜெயந்தி ராதாகிருஷ்ணன் 26 கவுன்சிலர்களின் ஆதரவுடன் தலைவர் பதவியில் வெற்றி பெற்றார்.

அதேபோல் துணை தலைவர் பதவியில் தி.மு.க.வை சேர்ந்த ஜெயபிரபா மணிவண்ணன் என்பவர் வெற்றி பெற்றார். இதையடுத்து கட்சி தலைமை கேட்டுக்கொண்டதன் படி ஜெயபிரபா மணிவண்ணன் தனது துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் துணை தலைவர் பதவி காலியாக இருந்த நிலையில், துணை தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நகராட்சி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) மதியம் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதி வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் நெல்லிக்குப்பத்தில் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான சி.வெ‌.கணேசன் தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்களின் அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் தேர்தல் பொறுப்பாளர் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நகரமன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், நகர தி.மு.க. செயலாளர் மணிவண்ணன், திரைப்பட தயாரிப்பாளர் சங்க கவுரவ செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது தி.மு.க. தலைமை அறிவித்த படி, கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் நெல்லிக்குப்பம் நகர மன்ற துணை தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவருக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிப்பதுடன், போட்டியின்றி வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஏற்கனவே நகராட்சி தலைவர் மற்றும் துணைதலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கிரிஜா திருமாறன் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
இன்று மதியம் நடைபெறும் மறைமுக தேர்தலில் என்ன நடைபெறும் என்ற பரபரப்பான நிலையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் எதிர்நோக்கி பார்த்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %