0 0
Read Time:6 Minute, 30 Second

ஐக்கிய அரபு நாடுகளின் முன்னணி நிறுவனங்களுடன் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.துபாயில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பு கூட்டத்தில், அமீரக தொழில் நிறுவனங்கள் சார்பில் தமிழகத்தில் ரூ.2,600 கோடி முதலீடு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, 4 நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் பங்கேற்றார். அங்கு அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு தளத்தை திறந்து வைத்தார். இதில், தமிழ்நாடு அரங்கு மூலம் சர்வதேச அளவில் தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டு, துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தது.

தொடர்ந்து நேற்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் ஜெபல் அலி சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு சென்றார். அங்குள்ள செயல்பாடுகள் குறித்து அவர் நேரில் பார்வையிட்டார்.

தொடர்ந்து அவர் துபாய் பிசினஸ் பே பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இதில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் திட்டங்கள், தமிழகத்தில் தொழில் தொடங்க உள்ள வசதிகள் குறித்த வீடியோ காட்சிகள் திரையில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து துபாயில் உள்ள பன்னாட்டு வர்த்தகர்களுக்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற ஒப்பந்த நிகழ்ச்சியில், இரும்பு தளவாடங்களை உற்பத்தி செய்யும் நோபிள் ஸ்டீல்ஸ் குழும நிறுவனத்துடன் மட்டும் 1,000 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சாகுல் ஹமீது மற்றும் தமிழ்நாடு அரசு நிறுவனமான ‘கைடன்ஸ்’-இன் மேலாண்மை இயக்குனர் பூஜா குல்கர்னி ஆகியோர் கையெழுத்திட்டனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் 1,200 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து துபாயை சேர்ந்த ‘ஒயிட் ஹவுஸ்’ நிறுவனத்தின் சார்பில், தமிழகத்தில் தையல் ஆலைகள் நிறுவுவதற்கு ரூ.500 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அந்த நிறுவனத்தின் சார்பில், மேலாண்மை இயக்குனர் அப்துல் பாரி கலந்துகொண்டு ஒப்பந்தம் செய்தார். இதன் மூலம் தமிழகத்தில், 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரப்பட உள்ளது.

இறுதியாக டிரான்ஸ்வேர்ல்டு குழுமம் தமிழ்நாடு அரசுடன் ரூ.100 கோடி மதிப்பிலான முதலீட்டில் உணவுப்பூங்கா அமைப்பதற்கான ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

பின்னர் நேற்று மாலை நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆஸ்டர் டி.எம். ஹெல்த்கேர் அமைப்பு ரூ.500 கோடி முதலீடு மற்றும் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், 500 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரியை தமிழ்நாட்டில் நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஷெராப் குழும நிறுவனம், தமிழ்நாட்டில் ரூ.500 கோடி முதலீடு மற்றும் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், இருப்புப்பாதை இணைப்பு வசதியுடன், ஒரு சரக்கு போக்குவரத்து பூங்கா அமைத்திடுவதற்காக, தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் சேர்த்து ரூ.2,600 கோடி முதலீடு மற்றும் 9 ஆயிரத்து 700 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய அரபு நாடுகளின் முன்னணி நிறுவனங்களுடன் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, அமீரக முதலீட்டாளர் அமைப்பு உறுப்பினர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் நிகழ்த்திய சந்திப்பையடுத்து 9,700 பேர்களுக்கு வேலைவாய்ப்பளித்திடும் வகையில் 2,600 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

நமது இலக்குகளை நோக்கி விரைந்து நடைபோடுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %