சீர்காழியில், ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சீர்காழி:-
சீர்காழியில், ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓய்வு பெற்ற வங்கி மேலாளர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுபஸ்ரீ கார்டன் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது 62). ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். இவருடைய மனைவி ராகினி. இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளங்கோவன் கடந்த சில மாதங்களாக சீர்காழி தென்பாதி வல்லபாய் படேல் தெருவில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு தனியாக வசித்து வந்தார். மேலும் இவர் தென்பாதி மெயின் ரோட்டில் பால் கடை நடத்தி வந்தார்.
வீட்டில் பிணம்
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு சென்றவர் நேற்று காலை கடையை திறக்க வரவில்லை. இதையடுத்து கடை ஊழியர் ஒருவர், இளங்கோவனின் வீட்டுக்கு சென்று பார்த்தார்.
அப்போது அங்கு இளங்கோவன் வாயில் நுரை தள்ளிய நிலையில் படுக்கையில் பிணமாக கிடந்ததும், அவர் அருகில் பூச்சிக்கொல்லி மருந்து(விஷம்) பாட்டில் இருந்ததும் தெரிய வந்தது.
விஷம் குடித்து தற்கொலை
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இளங்கோவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், இளங்கோவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.