மயிலாடுதுறை: தலைஞாயிறு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மயிலாடுதுறை, அருகே ஆனதாண்டவபுரத்தில் டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தேவேந்திரன், செயலாளர் சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஜெய்சங்கர் வரவேற்றார்.சங்க பொதுச்செயலாளர் டெல்டா அன்பழகன் பேசினார்.
மயிலாடுதுறை, அருகே தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறப்பதற்கு சிறப்பு நிபுணர் குழுவை அமைத்த தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கும், சர்க்கரை ஆலையை திறக்க தொடர்ந்து போராடி வந்த முன்னாள் எம்.எல்.ஏ., குத்தாலம் கல்யாணத்துக்கும் நன்றி மற்றும் பாராட்டு தெரிவிப்பது.
நடப்பாண்டில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியின் போது அதனை கண்காணிக்கும் பணியில் அரசு அதிகாரிகளுடன், 2 விவசாயிகளை நியமிக்க வேண்டும்.
விவசாய பயிர்களை பாதுகாக்கும் வகையில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஒருங்கிணைந்த எலி ஒழிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தில் சாய்ந்துள்ள மின்கம்பங்களையும், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளையும் உடனே சீரமைக்க வேண்டும்.
பழுதடைந்த டிரான்ஸ்பார்மர்களை பழுது நீக்க கடலூர் அல்லது திருவாரூர் கொண்டு செல்வதால் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க டிரான்ஸ்பார்மர்கள் பழுது நீக்கும் மையத்தை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் நிர்வாகிகள் வினோத், கண்ணன், பரணி, தர்மலிங்கம், ரஜினி, கொற்கை சிவசண்முகம், ஆதித்தன், மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் பாபு நன்றி கூறினார்.