பண்ருட்டி நகராட்சி 26-வது வார்டு களத்து மேட்டு பகுதியில் 196 வீடுகள் உள்ளன. இங்கு நகராட்சி சார்பில் சாலை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் வீடுகளுக்கு வரி விதித்து வசூல் செய்யப்படுகிறது.
இப்பகுதி நீர்ப்பிடிப்பு பகுதி என்பதால் இங்குள்ள வீடுகளை காலிசெய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அப்பகுதி மக்களுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் அப்பகுதி மக்கள் வீடுகளை காலிசெய்யவில்லை.
இந்த நிலையில் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி தொடங்கியது. இதுபற்றி அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து, அதிகாரிகளை முற்றுகையிட்டனர். தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தங்களுக்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும், மேலும் குடியிருக்க மாற்று இடம் உடனே ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து தாசில்தார் சிவ கார்த்திகேயன், நகரசபை ஆணையர் மகேஸ்வரி நகர சபை தலைவர் ராஜேந்திரன் ஆகியோரிடம் மனு கொடுத்தனர். தொடர்ந்து 15 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.