கடலூர், கம்மாபுரம் ஒன்றியம் சேப்ளாநத்தம் தெற்கு ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சேப்ளாநத்தம் தெற்கு ஊராட்சிக்கு இடைத்தேர்தல் நடத்தக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து அவர்கள் கூடுதல் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கை சந்தித்து அளித்த மனுவில், சேப்ளாநத்தம் தெற்கு ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழந்த நிலையில், அந்த இடத்துக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இது வரை நடக்கவில்லை.
இதனால் கடந்த ஒரு ஆண்டாக தலைவர் இன்றி ஊராட்சி நிர்வாகம் செயல்படுகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது.
ஆகவே இந்த ஊராட்சிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வருகிற 4-ந்தேதி உண்ணாவிரதம், 5-ந்தேதி மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.