0 0
Read Time:3 Minute, 55 Second

கடலூர், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி நடக்கும் 2 நாட்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தவிர தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை பாதுகாக்க வேண்டும். அரசு கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கைவிட வேண்டும். வங்கிகளில் வைப்புநிதி வைத்துள்ள சேமிப்பாளர்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கமும் நேற்று பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.

கடலூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர் சங்கத்தினர் பொது வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகள் பெரும்பாலான ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

ஆண்டு முடிவு என்பதால் அத்தியாவசிய பணிகள் மட்டும் நடைபெற்றன. மற்ற ஊழியர்கள் அனைவரும் வேலையை புறக்கணித்து, போராட்டத்தில் பங்கேற்றனர். கடலூரில் நேதாஜிரோட்டில் கடலூர் மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் மீரா தலைமை தாங்கினார். இந்தியன் வங்கி ஓய்வூதியர் சங்கம் திருமலை, வங்கி ஊழியர் சங்க மாவட்ட உதவி தலைவர் ரமணி, வங்கி அதிகாரிகள் சங்கம் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுச்செயலாளர் ஸ்ரீதரன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். போராட்டத்தில் ஆயுள் காப்பீட்டு ஊழியர் சங்கம் இணை செயலாளர் வைத்தியலிங்கம், கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் பொதுச் செயலாளர் சீனுவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வங்கி ஊழியர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தால், மாவட்டத்தில் உள்ள 210 தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகளை சேர்ந்த ஊழியர்கள், அதிகாரிகள் வேலைக்கு செல்லவில்லை.

சுமார் 500 பேர் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற தாகவும், பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை ரூ.200 கோடிக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும், ஒரு சில அதிகாரி கள் சங்க நிர்வாகிகள் மட்டும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் வங்கி ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதன் மூலம் மேலும் பணிகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %