அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட முடியும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பல்வேறு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கடந்த 24-ஆம் தேதி பயணம் மேற்கொண்டார். 4 நாட்கள் பயணத்தில் 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு பெறப்பட்டன. இந்த நிலையில், துபாய் கலீஜ் டைம்ஸ் இதழுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஐக்கிய அமீரக முதலீட்டாளர்களிடமிருந்து 100 கோடி டாலர் மதிப்பிலான முதலீட்டை எதிர்பார்ப்பதாகவும் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக இருப்பதால் தொழிற்சாலைகள் பிரச்னைகளின்றி இயங்க முடியும் எனவும் கூறியுள்ளார்.
கடந்த 8 மாதங்களில் 124 நிறுவனங்கள் 900 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்த மு.க.ஸ்டாலின், அடுத்த 10 ஆண்டுகளில் 1 டிரில்லியன் பொருளாதாரம் என்பது சாதாரணமான இலக்கு இல்லை என்றும் இருந்தாலும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் அதனை எட்ட முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 11 வகையான ஆரம்பக்கட்ட தொழில்கள் எதிர்காலத்தில் உதவக்கூடும் என்கிற நம்பிக்கையில் அடையாளம் கண்டுள்ளோம். மேலும் உலகின் குறிப்பிட்ட சில நாடுகளை அடையாளம் கண்டுள்ளோம். அங்குள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் தொடர்ந்து முதலீடு செய்யவும், தொழில் நுணுக்கங்களை அளிக்கவும், உலகளவில் தமிழ்நாட்டை முதலீடு மையமாக மாற்றவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.