விருத்தாசலம், மத்திய அரசின் மக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து மத்திய, மாநில தொழிற்சங்கங்கள் 2 நாட்கள் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்து போராட்டம் நடத்தி வருகிறது.
அதன்படி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் விருத்தாசலம் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தங்கராசு, மாவட்ட துணை செயலாளர் முத்து குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் செல்வராசு, பழமலை, பாஸ்கர், கட்டிமுத்து, செந்தமிழ் செல்வன், தெய்வசிகாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் சிதம்பரம் தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை தலைவர் ஜெயசந்திரராஜா தலைமை தாங்கினார். மாவட்ட துணைதலைவர் துரை.சேகர் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி பேசினார். இதில் நிர்வாகிகள் நரசிம்மன், யோகராஜ், நடராஜ், கனகசபை, சிவராமன், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு இந்திய மாதர் தேசிய சம்மேளன மாவட்ட தலைவர் அறிவழகி தலைமை தாங்கினார்.
விவசாய தொழிலாளர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் பட்டுசாமி, தமிழ் மாநில விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் குப்புசாமி, வட்ட தலைவர் விஜயபாண்டியன், வட்ட தலைவர் ராவணராஜன், ஜீவா பூக்கடை தொழிலாளர் சங்கம் ராமச்சந்திரன், பாலமுருகன், தமிழ் மாநில விவசாயிகள் சங்கம் ரவி, சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
சிதம்பரம் மணலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க மண்டல பொருளாளர் பால.செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.
சி.ஐ.டி.யு.மண்டல துணை தலைவர் சிவகுமரவேல், அம்பேத்கர் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மண்டல தலைவர் சுந்தர், பணிமனை செயலாளர் காசிவிசுவநாதன், துணை பொது செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில் மண்டல துணை பொது செயலாளர் ராஜமாணிக்கம் நன்றி கூறினார்.