சென்னை, தமிழகத்தில் 14 வகையான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்களிடமிருந்து அந்த பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க சுகாதார ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று 289 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை 40 ஆயிரத்து 336 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 17.89 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.29 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆதம்பாக்கத்தில் ஆலந்தூர் மண்டல உதவி கமிஷனர் சீனிவாசன் உத்தரவின் பேரில் மண்டல சுகாதார அதிகாரி டாக்டர் சுதா, சுகாதார அலுவலர் கணேஷ் ஆகியோர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் அசோக்குமார், ரேவதி, திவ்யா, பரமேஸ்வரி மற்றும் ஆதம்பாக்கம் போலீசார் ஆதம்பாக்கம் கிழக்கு கரிகாலன் தெரு, வெள்ளாளர் தெரு, ரெயில்வே நிலைய தெரு ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்கள், கடைகளில் சோதனை செய்தனர். இதையடுத்து, 380 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்காரர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.