மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடியில் வள்ளியம்மை பெயரில் வேளாண் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வேளாண் இணைஇயக்குனர் சேகர், நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலைமேலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பல்வேறு கோாிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
முருகன்: தொடங்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் தட்டுப்பாடு இன்றி உரங்கள் விற்பனை செய்ய வேண்டும். யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்கு தட்டுப்பாடு இன்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னாள் எம்.எல்.ஏ.கல்யாணம்: தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சட்டசபையில் தெரிவித்துள்ளார். நிச்சயமாக ஆலை இயங்கத்தொடங்கும். அதற்கு தேவையான கரும்பை விவசாயிகள் உற்பத்தி செய்துகொடுக்க முன்வர வேண்டும்.
கோதண்டராமன்: முடவனாற்றை தூர்வாரி வடிகால் வசதிகளை மேம்படுத்தி கொடுக்க வேண்டும். பொதுப்பணித்துறை வாய்க்கால்களில் மண்டிகிடக்கும் கருவேலை மரங்களை அகற்ற வேண்டும்.
காவேரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கத் தலைவர் கோபிகணேசன்: தரங்கம்பாடி தாலுகா தில்லையாடி கிராமத்தில் வள்ளியம்மை பெயரில் வேளாண் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைத்துகொடுக்க வேண்டும். உளுந்து, பயிறு காப்பீடு செய்தவர்களுக்கு 2 ஆண்டுகளாக இழப்பீட்டுத்தொகை கிடைக்கவில்லை. எனவே இழப்பீட்டு தொகை உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் எந்திர வாடகை மையங்கள் அமைக்க வேண்டும் என்றார்.
வரதராஜன்: பாரம்பரிய அரிசி ரகங்களை கூட்டுறவு சங்கங்கள் மூலம் குறைந்த விலைக்கு மக்களுக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். வைரவன்இருப்பில் புதுமண்ணியாற்றில் தடுப்பணை கட்டிகொடுக்க வேண்டும். கொள்ளிடம் வட்டாரத்தில் பயிர்களை மயில்கள் அதிக அளவில் சேதப்படுத்தி நாசமாக்குகிறது. இதற்கு இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்.
ராஜேந்திரன்: நெல்சாகுபடி அதிகமாக இருப்பதால் மாற்றுப்பயிர் சாகுபடி செய்ய வேண்டுமென்று அரசு வலியுறுத்துகிறது. மணல்மேடு சுற்றுவட்டார பகுதிகளில் பருத்தி சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டுள்ளது ஆனால் அவற்றை விற்பனைசெய்ய குத்தாலம், மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளுக்குத்தான் கொண்டுசெல்ல வேண்டியுள்ளது.
மணல்மேட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைத்துகொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.