நெல்லிக்குப்பம், புதுச்சேரி மாநிலம் கன்னிக்கோவில் பாரதி நகரை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது 28). இவரது மனைவி காயத்ரி. தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஏற்கனவே அதின் கிருஷ்ணா (8), நிதின் கிருஷ்ணா (5) என 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் மீண்டும் கர்ப்பமான காயத்ரிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று விக்னேஷ்வரன் தனது 2 மகன்களுடன் மோட்டார் சைக்கிளில் ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக புறப்பட்டார். கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி அருகே கரிக்கன்நகர் பகுதியிலுள்ள சிறிய பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் விக்னேஸ்வரனும், அவரது மகன்களும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்டனர்.
இதில் விக்னேஷ்வரன் தலை லாரி சக்கரத்தில் சிக்கியது. சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே விக்னேஷ்வரன் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த விக்னேஷ்வரனின் 2 மகன்களும் சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.