விருத்தாசலம், பரங்கிப்பேட்டை சாலையில் பூந்தோட்டம் பகுதியில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த10-க்கும் மேற்பட்ட லாரிகள் அணிவகுத்து நின்றன. அப்போது அங்கு வந்த விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகே பெருந்துறை கிராமத்தை சேர்ந்த தொழிலாளியான சச்சிதானந்தம் (வயது 25). என்பவர் அணிவகுத்து நின்ற லாரிகளில் ஒன்றின் அடியில் சென்று படுத்து தூங்கினார்.
இதை கவனிக்காத டிரைவர் லாரியை இயக்கினார். இதில் லாரி சக்கரத்தில் சச்சிதானந்தம் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சச்சிதானந்தம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே அப்பகுதியை சேர்ந்த மக்கள் அங்கு ஒன்று திரண்டனர்.
பின்னர் அவர்கள், விருத்தாசலம் பூந்தோட்டம் பகுதியில் இதுபோன்று லாரிகள் இருபுறமும் அணிவகுத்து நிற்பதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. எனவே இப்பகுதியில் லாரிகளை நிறுத்த அனுமதிக்கக்கூடாது. மேலும் அங்குள்ள டாஸ்மாக் கடையையும் அகற்ற வேண்டும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித்ஜெயின் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.