கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் மண்டல குழு தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. ஏற்கனவே தி.மு.க. சார்பில் மண்டல குழு தலைவர்கள் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
அதன்படி 1-வது மண்டல குழு தலைவர் பதவிக்கு த.சங்கீதா, 2-வது மண்டல குழு தலைவர் பதவிக்கு பிரசன்னகுமார், 3-வது மண்டல குழு தலைவர் பதவிக்கு எஸ்.சங்கீதா, 4-வது மண்டல குழு தலைவர் பதவிக்கு இளையராஜா ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.
இதையடுத்து நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் விஸ்வநாதன் முன்னிலையில் மறைமுக தேர்தல் நடந்தது. இதில் 1 மற்றும் 2-வது மண்டலத்திற்கு தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் த.சங்கீதா, பிரசன்னகுமார் ஆகிய 2 பேரும் மண்டல குழு தலைவர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்பிறகு 3-வது மண்டலத்திற்கான மறைமுக தேர்தல் நடந்தது. அப்போதுதி.மு.க. வேட்பாளர் எஸ்.சங்கீதாவை எதிர்த்து, அ.தி.மு.க. கவுன்சிலர் சங்கீதா வசந்தராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அந்த மண்டலத்தை சேர்ந்த 11 வார்டு உறுப்பினர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கவுன்சிலர்கள் வாக்களித்தனர்.
முடிவில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.சங்கீதாவுக்கு 6 ஓட்டுகளும், அ.தி.மு.க. வேட்பாளர் சங்கீதா வசந்தராஜிக்கு 5 ஓட்டுகளும் கிடைத்தன. இதன் மூலம் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.சங்கீதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் 4 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தங்களது வேட்பாளருக்கு வாக்களித்த நிலையில், மாற்றுக்கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ஒருவரும் வாக்களித்ததால், அவருக்கு கூடுதலாக ஒரு ஓட்டு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு 4-வது மண்டலத்திற்கு தி.மு.க. வேட்பாளர் இளையராஜா வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து வெற்றி பெற்ற 4 பேருக்கும், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஆணையாளர் விஸ்வநாதன் வழங்கினார்.
தொடர்ந்து மதியத்திற்கு பிறகு நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடந்தது.
இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்றவர்கள் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைசெல்வன், தி.மு.க. நகர செயலாளர் ராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதில் மாவட்ட மாணவரணி அகஸ்டின், பாலாஜி, நகர பொருளாளர் சலீம், நகர இலக்கிய அணி துர்கா செந்தில் மற்றும் தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இன்று (வியாழக்கிழமை) தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடக்கிறது.