சீர்காழி, அருகே டிராக்டர் மீது தனியார் பஸ் மோதியதில் படிக்கட்டில் பயணம் செய்த 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. சீர்காழி தென்பாதி உப்பனாறு அருகே சென்றபோது முன்னால் சென்ற டிராக்டரை பஸ் முந்திச்செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது பஸ் மோதியது.
இதனால் பஸ் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்த பத்தாம் வகுப்பு மாணவர் மணல்மேடு சேத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் மகன் விஜயராஜ்(வயது 15) என்பவரும், சீர்காழயில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் சட்டநாதபுரத்தை சேர்ந்த பக்கிரி மகன் அர்ஜுணன்(17) என்பவரும் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த 2 மாணவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மாணவர் விஜயராஜ் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விபத்தால் சிதம்பரம்-மயிலாடுதுறை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது