நீட் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் அழுத்தமாக வலியுறுத்தியதாகவும் ட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலதாமதம் செய்து வருகிறார் என்பதை தெரிவித்ததாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்
பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது நீட் விவகாரம் குறித்து பேசியதாகவும், இந்த சந்திப்பு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருவதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் மேளதாள வாத்தியங்களுடன் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதை தொடர்ந்து டெல்லியில் இன்று பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இதன் பின்னர் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்காரி ஆகியோரையும் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் உடனான சந்திப்பு மனநிறைவுடையதாக அமைந்தது. நான் கூறிய கோரிக்கைகளை பொறுமையுடன் பிரதமர் கேட்டறிந்தார். இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. எனவே, இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவி செய்ய அனுமதி வழங்க வேண்டும். தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை, கட்சத்தீவு மீட்பது குறித்து கோரிக்கை வைத்துள்ளேன்.
உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் பயில்வது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தேன். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட அனுமதி அளிக்கக்கூடாது. ஜிஎஸ்டி இழப்பை தொடர்ந்து வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தேன் என தெரிவித்தார்.
முக்கியமாக, நீட் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் அழுத்தமாக வலியுறுத்தியதாகவும் ட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலதாமதம் செய்து வருகிறார் என்பதை தெரிவித்ததாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.