நெல்லிக்குப்பம், நகராட்சியில் நியமனக்குழு உறுப்பினர், ஒப்பந்தக்குழு உறுப்பினர் மற்றும் 4 வரி மேல்முறையீட்டுக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி முன்னிலையில் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இதையடுத்து நியமனக்குழு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க. சார்பில் ஜெயபிரபா மணிவண்ணன், ஒப்பந்தக்குழு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க.வை சேர்ந்த ஷப்னா பேகம் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து வரி மேல் முறையீட்டுக் குழு உறுப்பினர் பதவிக்கு மனித நேய மக்கள் கட்சி கவுன்சிலர் இக்பால், தமிழக வாழ்வுரிமை கட்சி கவுன்சிலர் கவுரி கார்த்திக், காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் சரளா, தி.மு.க. கவுன்சிலர் முத்தமிழன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் திடீரென தி.மு.க. கவுன்சிலர் இலக்கியா சாமிநாதன் 5-வது நபராக வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது இந்த குழு உறுப்பினர் நியமனம் குறித்து தன்னிடம் யாரும் விவாதிக்கவில்லை என்று கூறி சுயேச்சை கவுன்சிலர் திடீரென வெளிநடப்பு செய்து விட்டு சென்று விட்டார். அதையடுத்து இந்த பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடந்தது.
இதில் சுயேச்சை கவுன்சிலரை தவிர மற்ற 29 கவுன்சிலர்களும் வாக்களித்தனர். அப்போது 5-வது நபராக போட்டியிட்ட தி.மு.க. கவுன்சிலர் இலக்கியா சாமிநாதன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். மற்ற 4 பேரும் வெற்றி பெற்றனர். அதன்பிறகு வெற்றி பெற்ற அனைவருக்கும் ஆணையாளர் பார்த்தசாரதி, வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கினார்.
சான்றிதழை பெற்ற அவர்கள் நகராட்சி தலைவர் ஜெயந்தி ராதா கிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றனர். அப்போது துணைத் தலைவர் கிரிஜா திருமாறன், தி.மு.க. நகர செயலாளர் மணிவண்ணன், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கவுரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், நகராட்சி பொறியாளர் பாண்டு, துப்புரவு அலுவலர் சக்திவேல், பணி மேற்பார்வையாளர் வாசு மற்றும் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.