மயிலாடுதுறை, மாவட்டத்தில் காலியாக இருந்த கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதன்படி மயிலாடுதுறை, தாலுகாவில் 16 பணியிடங்களும், சீர்காழி தாலுகாவில் 15 பணியிடங்களும், தரங்கம்பாடி தாலுகாவில் 15 பணியிடங்களும், குத்தாலம் தாலுகாவில் 14 பணியிடங்களும் என 4 தாலுகாக்களிலும் சேர்த்து மொத்தம் 60 கிராம உதவியாளர்கள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் 60 கிராம உதவியாளர் பணி நியமனத்தை மாவட்ட கலெக்டர் லலிதா திடீரென ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவில் அரசு வழிகாட்டுதல்படி, கிராம உதவியாளர் பணிநியமனம் தொடர்பாக ஒவ்வொரு நிலையிலும் மாவட்ட கலெக்டரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் தாசில்தார்கள் அரசாணை நிலை எண்.574- ல் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றாமல் தன்னிச்சையாக பணிநியமன ஆணை வழங்கி விதிமீறல்கள் செய்தது தெளிவாக தெரியவந்துள்ளது.
எனவே, அரசு விதிகள் மற்றும் அரசாணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றாமல் மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 நாட்களுக்கு முன்பு புதிதாக 60 கிராம உதவியாளர்கள் பணி நியமனம் செய்தது ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.