மயிலாடுதுறை, வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கிடங்கில் கொட்ட அனுமதி மறுப்பதை கண்டித்து மயிலாடுதுறையில் துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் அவர்கள் மறியலிலும் ஈடுபட்டனர்
மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இந்த 36 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் ஆனதாண்டவபுரம் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு மலைப்போல் தேங்கியுள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரிக்கும் மையம் 6 இடங்களில் ஏற்படுத்தப்பட்டும் முறையாக தரம் பிரிக்காமல் சேகரிக்கப்படும் குப்பைகள் பொது இடங்கள், சுடுகாடு, ஆற்றங்கரையோரங்களில் கொட்டப்பட்டு வருகிறது.
குப்பைகள் பொது இடங்களில் கொட்டப்படுவதால் துப்புரவு பணியாளர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் குப்பை கிடங்கில் குப்பைகளை கொட்ட அனுமதிக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், குப்பைகளை சேகரிப்பதற்கான பாதுகாப்பு உபகரணங்களை வழங்காததை கண்டித்தும் நேற்று துப்புரவு பணியாளர்கள் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இங்கு நகரசபை தலைவர் மற்றும் ஆணையர் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை விடுத்து நகராட்சி அலுவலகம் முன்பு தரங்கம்பாடி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து நகரசபை தலைவர் குண்டாமணி என்கிற செல்வராஜ் மற்றும் நகராட்சி ஆணையர் பாலு ஆகியோர் அங்கு வந்து துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியலால் மயிலாடுதுறை- தரங்கம்பாடி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.